மழை நீரில் சிக்கிய பள்ளி வேன்; கதறிய குழந்தைகளை காப்பாற்றிய பொதுமக்கள்!
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் கதறினர்.
கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாலையில் பலத்த மழை பெய்தது.
சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்கபால பாதையில் மழை நீர் தேங்கியது.
அப்போது அந்த வழியாக சென்ற கோவில்பட்டி ஏ.வி மேல் நிலைப்பள்ளி வாகனம் மழைநீரில் சிக்கியது. அதில் சென்ற குழந்தைகள் கதறினர்.
இந்த கதறல் சத்தத்தினை கேட்ட அருகில் இருந்த மக்கள் விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு பலத்த மழையின் போது சுரங்கபாலத்தில் வாகனங்கள் சிக்கி கொள்வது தொடர்கதையாக உள்ளது.
சர்வீஸ் சாலை மற்றும் வாறுகால் அமைக்கவில்லை என்பதால் மழைநீர் சுரங்கபாலத்தில் புகுந்து தேங்கி விடுகிறது.
பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஒவ்வொரு மழையின் போது இது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது.
மேலும் இது போன்ற காலங்களில் போக்குவரத்தினை மாற்றிவிட காவல்துறை அல்லது நகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.