வாரத்தின் முதல் நாள் உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம்
வாரத்தின் முதல் நாளான இன்று (7) உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வரும் நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் 1987இற்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக கூறப்படும் நிலையில் சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
ஆசியா பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம்
ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது.
ட்ரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டொலர்களை இழந்தனர்.