வடகொரியாவுக்கு போட்டியாக களமிறங்கிய தென்கொரியா!
வடகொரியாவை தொடர்ந்து தென்கொரியாவும் ராக்கெட் ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் வடகொரியா மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறபோதும்,அதை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து அடாவடி போக்கை கையாள்கிறது.
அதே சமயம் கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு வடகொரியா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை சோதிப்பதை நிறுத்திய நிலையில் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை மட்டுமே அடுத்தடுத்து சோதித்து வந்தது.
இந்த சூழலில் மான்ஸ்டர் ஏவுகணை என்று வர்ணிக்கப்படும் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையான ‘ஹ்வாசோங்-17’ ஏவுகணையை வடகொரியா அண்மையில் சோதித்தது பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்தன. இந்த நிலையில், தென்கொரியாவும் ராக்கெட் ஏவி சோதனை நடத்தியுள்ளது.
திட எரிபொருள் கொண்ட இந்த ராக்கெட், போலி செயற்கைகோள் ஒன்றையும் விண்வெளியில் நிலைநிறுத்தும் புகைப்படங்களையும் தென்கொரியா வெளியிட்டுள்ளது.
அதேவேளை தற்போது வான்கண்காணிப்பு பணிக்காக தென்கொரியாவிடம் பிரத்யேகமாக ராணுவ செயற்கைகோள் வசதி இல்லை.
வடகொரியாவின் முக்கிய மையங்களை அமெரிக்காவின் உளவு செயற்கைகோள் மூலமாக கண்காணித்து வருவதனால், விரைவில் தென்கொரியா உளவு செயற்கைகோளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.