ஹோர்முஸ் நீரிணை பதற்றம் ; சர்வதேச கடல்சார் சட்டம் மீறப்படுவதாக குற்றச்சாட்டு
கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அரசியல் இணைப் பேராசிரியரான பால் மஸ்கிரேவ், ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு முரணானவை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், ஈரானின் தற்போதைய நிலைப்பாடு கடல்சார் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகளை தெளிவாக மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை ஹோர்முஸ் நீரிணையை மட்டும் பாதிப்பதல்ல என்றும், உலகளாவிய கடல்சார் வர்த்தகப் போக்குவரத்துக்கு ஆபத்தான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் முக்கிய கடல்சார் போக்குவரத்து வழித்தடங்களில் பல நாடுகளுக்கு முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக நலன்கள் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதேபோன்று வேறு நாடுகளும் முக்கிய கடல்சார் நுழைவாயில்களில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால், அது உலக வர்த்தகத்தையே பாதிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, மத்திய தரைக்கடலுக்குள் நுழையும் கப்பல் போக்குவரத்தில் ஸ்பெயின் கட்டுப்பாடுகளை அறிவித்தால் எவ்வாறு சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்கிறதோ, அதேபோன்ற நிலைமையையே ஈரானின் தற்போதைய நடவடிக்கையும் உருவாக்குவதாக பால் மஸ்கிரேவ் குறிப்பிட்டுள்ளார்.