சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பு ; பட்டாசுக் கட்டுப்பாடு, ஆயுத ஏற்றுமதித் தளர்வுக்கு மக்கள் ஆதரவு
சுவிட்சர்லாந்தில் நேற்று (29) நடைபெற்ற தேசிய வாக்கெடுப்பில், பட்டாசுகளைக் கட்டுப்படுத்தும் முன்மொழிவுக்கும் ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முன்மொழிவுக்கும் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, 13ஆவது AHV ஓய்வூதியத்திற்கான நிதியைத் திரட்டும் வகையில் பெறுமதி கூட்டப்பட்ட வரியை (VAT) அதிகரிக்கும் திட்டத்தையும், திருமணமான தம்பதிகளுக்கான வரி முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன்மொழிவையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
பட்டாசுக் கட்டுப்பாடு தொடர்பான முன்மொழிவுக்கு சுமார் 59 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முன்மொழிவுக்கு 54.3 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் சுவிட்சர்லாந்தின் ஆயுத ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
எனினும், 13ஆவது AHV ஓய்வூதியத்திற்கான நிதியைத் திரட்டும் நோக்கில் பெறுமதி கூட்டப்பட்ட வரியை அதிகரிப்பதற்கான முன்மொழிவை 56.2 சதவீத வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.
மேலும், திருமணமான தம்பதிகளுக்கான வரி முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன்மொழிவும் 57.7 சதவீத வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாக்கெடுப்பு முடிவுகள், சுவிட்சர்லாந்தின் சமூகக் கொள்கை, வரி முறை மற்றும் ஆயுத ஏற்றுமதிக் கொள்கை தொடர்பான மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
இதன்படி, வாக்கெடுப்பில் முன்வைக்கப்பட்ட நான்கு முன்மொழிவுகளில் இரண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.