வணிக வளாகம் ஒன்றில் கொத்தாக கொல்லப்பட்ட மக்கள்: ஆயுததாரி சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு 8 பேர்களை கொன்ற நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் 7 பேர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், அதில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய தாக்குதல்தாரியை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
சம்பவத்தின் போது வணிக வளாகத்தினுள் தமது வாகனத்தில் இருந்து வெளியேறி, உடனையே துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த நிலையில் துப்பாக்கிதாரி உட்பட 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
காயங்களுடன் தப்பிய 9 பேர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளனர். எஞ்சிய 7 பேர்களில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் ஆலன் நகரப்பகுதியில் சுமார் 100,000 மக்கள் குடியிருந்து வருகின்றனர். சம்பவத்தின் போது அந்த வணிக வளாகத்தில் இருந்து சுமார் 300 பேர்கள் உயிருக்கு அஞ்சி நாலா பக்கமும் சிதறி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
2023 பிறந்ததில் இருந்து இதுவரை 198 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.