புறப்படுகையில் தரையில் உரசிய விமானம்; பீதியில் உறைந்த பயணிகள்!
இத்தாலியில் விமானம் புறப்படும் போது தரையில் உரசியபடி புகையை கிளப்பி சென்றதால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் பீதி அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இத்தாலி லோம்பார்டி மாகாணத்தில் உள்ள பெர்னோ நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் இருந்து பிரேசிலின் சா பாலோ நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.
சில நூறு மீட்டர் தூரத்துக்கு தரையில் உரசிய விமானம்
போயிங் 777 ரக விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் வால் பகுதி தரையில் சில நூறு மீட்டர் தூரத்துக்கு தரையில் உரசியவாறே சென்றதால் விமானத்தில் இருந்து புகை கிளம்பியது.
இருப்பினும் விமானம் மேலே எழும்பி பறக்க தொடங்கியது. எனினும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக விமானி, விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்கினார்.
அதனையடுத்து, பயணிகள் மற்றும் ஊழியர்கள் என விமானத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் விமானம் பலத்த சேதம் அடைந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் பிரேசில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விமானம் புகையை கிளப்பியபடி ஓடுபாதையில் உரசியவாறே சென்ற வீடியோ சமூக வலைத்தங்களில் வைரகியுள்ளது.