பாகிஸ்தானை விமர்சித்து இந்தியாவை பாராட்டிய தலிபான்
தரம் குறைந்த கோதுமையை அளித்த பாகிஸ்தானை விமரிசிக்கும் அதேவேளையில் நல்ல தரமான கோதுமையை இந்தியா அளித்திருப்பதாக தலிபான் புகழ்ந்துள்ளனர்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் நிலவிவருகிறது. பாகிஸ்தான் அளித்த கோதுமையின் தரம் குறித்து தலிபான் அலுவலர் ஒருவர் புகார் தெரிவிப்பது போன்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல்ஹக் ஒமேரி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் அளித்துள்ள கோதுமை சாப்பிட முடியாத நிலையில் உள்ளது என தலிபான் அலுவலர் தெரிவித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
இதன்படி நல்ல தரமான கோதுமையை அளித்ததால் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் ட்விட்டரில் நன்றி தெரிவித்துவருகின்றனர். ஹம்துல்லா அர்பாப் என்ற ட்விட்டர் பயனாளி, "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி.
இரு மக்களுக்கிடையேயான நட்புணர்வு என்றென்றும் தழைக்கட்டும். ஜெய் ஹிந்த்" என பதிவிட்டுள்ளார். நஜிப் ஃபர்ஹோடிஸ் என்பவர், "ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழங்கிய கோதுமை பயன்படுத்த முடியாத அளவு கெட்டுப்போயுள்ளது.
இந்தியா எப்போதும் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது" என பதிவிட்டுள்ளார். இதற்கு மத்தியில், பாகிஸ்தான் கோதுமை குறித்து விமரிசித்த தலிபான் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா கடந்த மாதம் முதல் கோதுமை அளித்துவருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் வாகனம் 2000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிக் கொண்டு அட்டாரியை விட்டு ஜலாலாபாத்துக்கு சென்றுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.