அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்; அதிரடி கைது!
அமெரிக்க விமான நிலையமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெக்ஸாஸ் மாநிலத்தின் டலஸ் லவ் பீல்ட் விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
விமான நிலையத்துக்கு வந்த பெண்ணொருவர், கழிவறையொன்றுக்குள் சென்று தனது ஆடைகளை மாற்றிவிட்டு திரும்பிவந்தார்.
அதன்பின், அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியினால் கூரையை நேக்கி பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் என டலஸ் நகர பொலிஸ் உயர் அதிகாரி எடி கார்சியா தெரிவித்துள்ளார்.
இத்துப்பாக்கிப் பிரயோகத்தினால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
தமது உயிரை பாதுகாப்பாதற்காக பல பயணிகள் அங்கிருந்து ஓடினர். சிலர் மறைவான இடங்களில் ஒளிந்து கொண்டனர். பின்னர் பொலிஸார் அங்கு விரைந்து வந்து, மேற்படி பெண்ணின் காலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அப்பெண்ணை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
இப்பெண் 37 வயதான போர்ஷியா ஒடுபுவா(Portia Odubua) என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஏன் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார் என்பது உடனடியாக தெரியவரவில்லை.