யாழில் முச்சக்கரவண்டி சாரதிகளையும் விட்டுவைக்காத கொள்ளையர்கள்!
யாழ். மாவட்டத்தில் பயணிகள் போலப் பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாகப் பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (07.05.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலைக்கு வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும், சாரதிக்குக் குளிர்பானத்துக்குள் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
இதில் அவர் மயக்கமடைந்ததையடுத்து, அவரிடமிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர். அதே நாளில் கீரிமலையிலிருந்து பருத்தித்துறைக்கு வாடகைக்கு அமர்த்திய மற்றொரு முச்சக்கரவண்டி சாரதியிடமும் இதே பாணியில் அவர்கள் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முடுக்கி இருந்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்றைய தினம் அச்சுவேலிப் பகுதியில் இவ்வாறு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் சுன்னாகத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கும் இதேபாணியில் மயக்க மருந்து கொடுத்து நகைகளைத் திருட முயன்றபோது கண்டியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் மக்களிடம் அகப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டி சாரதி தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகைப் பணம் மற்றும் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு திருடுவதற்காகவே வெளி மாகாணங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் விடுதிகளில் அவர்கள் தங்கியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.