ரஷியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!
ரஷியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த போரில் இரு தரப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அத்துடன் , உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், போரை நிறுத்தக்கோரியும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போரை நிறுத்தக்கோரி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. அந்நாட்டின் 56 நகரங்களில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
புதின் அரசுக்கு எதிராகவும், உக்ரைன் மீதான போரை நிறுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் மாஸ்கோ உள்பட 56 நகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தை பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 366 பேரை பொலிசார் கைது செய்த பின்னர் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நவால்னியை விடுவிக்கக்கோரி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் ரஷியாவில் நடைபெற்ற போராட்டம் இது என பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன.