கனடாவின் மானிடோபாவில் சுழன்றடித்த சூறாவளி: கட்டடங்கள், மின் கம்பங்கள் சேதம்
கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சஸ்காட்செவன் எல்லைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹார்ன் எனும் பகுதியில், இந்தச் சூறாவளி தாக்கியதாக கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸ் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, மானிடோபா எல்லைக்கு அருகே தென்கிழக்கு சஸ்காட்செவன் பகுதியிலும் மேலும் இரண்டு சூறாவளிகள் தாக்கியுள்ளன.
அத்துடன் கனமழை மற்றும் பெரிய அளவிலான ஆலங்கட்டி மழையுடன் கூடிய பலத்த இடிபுயலும் அப்பகுதியைத் தாக்கியது. இப்புயல் காரணமாக மானிடோபாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
திங்கட்கிழமை காலை வரையிலான 48 மணி நேரக் கணக்கீட்டின்படி, கோலா பகுதியில் 80.5 மில்லிமீட்டரும், மினிடோனாஸ் பகுதியில் 71.7 மில்லிமீட்டரும், சான் கிளாரா பகுதியில் 71.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
பருவத்திற்கு மாறான அதிக வெப்பமான வளிமண்டலத்துடன் குளிர் காற்றுப் பிரதேசம் இணைந்ததே இந்த திடீர் சூறாவளிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.