50,000 டொலர் வெகுமதி அறிவித்த கனேடிய பொலிசார்: தேடப்படும் இருவர்
இருவேறு கொலை வழக்குகளில் தேடப்படும் இருவர் தொடர்பில் தலா 50,000 டொலர் வெகுமதி அறிவித்துள்ளனர் ரொறன்ரோ பொலிசார்.
தற்போது தலைமறைவாகியுள்ள குறித்த இரு குற்றவாளிகள் தொடர்பில் உறுதியான தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என புதன்கிழமை ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதில், ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை தொடர்பாக முதல் வெகுமதி அறிவிப்பை பொலிசார் வெளியிட்டுள்ளனர். கடந்த 2015ல் 23 வயதான ரசல் சஹாடியோ என்பவர் நோபல் பூங்காவில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
சம்பவத்தன்று நண்பர்களுடன் நோபல் பூங்காவிற்கு சென்ற ரசல் சஹாடியோவிடம் இருவர் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் அந்த இருவரும் கொடூரமாக தாக்கிக்கொள்ளவே, ரசல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு 50,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு வழக்கில், தேடப்படும் குற்றவாளியான 40 வயது உஸ்மான் காசிம் என்பவர் தொடர்பில் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரி மாதம் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு பொலிசார் தேடி வருகின்றனர்.
இவர் தொடர்பிலும், தற்போது 50,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.