கார் து நோர் நிலையத்தில் தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம் ; பல மணிநேர தாமதம்
ஐரோப்பாவின் பாரிஸ் 'கார் து நோர்' (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தாமதமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடருந்து நிலையத்துக்கும் அராஸ் (Arras) பகுதிக்கும் இடையில் இன்று (08) காலை இடம்பெற்ற நபர் ஒருவருடன் தொடர்புடைய தொடருந்து விபத்து காரணமாக, பிரதான தொடருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நபர் ஒருவர் மீது தொடருந்து மோதியதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இரு திசைகளிலும் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பல சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பிரெஞ்சுத் தேசிய தொடருந்து நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக கார் து நோர் தொடருந்து நிலையத்தில் பெரும் பயணிகள் நெரிசலும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலையத்தின் தகவல் பலகைகளில் பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல சேவைகளுக்கு நீண்ட நேர தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இப்பகுதியில் இயங்கும் TGV INOUI, OUIGO மற்றும் Eurostar ஆகிய அதிவேக தொடருந்து சேவைகளின் வருகை மற்றும் புறப்பாடுகளில் சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சில பயணங்களின் மொத்த நேரம் வழக்கத்தைவிட அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கார் து நோர் நிலையத்திலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள் தங்களது தொடருந்து சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் புறப்படும் நேரம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.