கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் படங்களை பயன்படுத்தி, கனடா மக்களை குறிவைத்து கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலர், இது மோசடி என்பதை உணரும் நேரத்திற்குள், தங்களின் முழு வாழ்க்கைச் சேமிப்பையும் இழந்து விடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்டாரியோ மாநிலத்தின் மார்கம் நகரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத 51 வயதான பெண், AI மூலம் உருவாக்கப்பட்ட கிரிப்டோ மோசடியில் 1.7 மில்லியன் டொலரை (சுமார் 17 லட்சம் கனடிய டொலர்) இழந்துள்ளார்.

2023 ஜூலை மாதம், எலோன் மஸ்க் பேசுவது போல உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை அவர் முகநூலில் பார்த்துள்ளார்.
அதில், “250 டொலர் முதலீடு செய்தால் தினமும் லாபம் கிடைக்கும்” என கூறப்படுவதாக தோன்றியது. ஆனால், அது குற்றவாளிகள் உருவாக்கிய AI போலி (Deepfake) வீடியோ என்பதும், மஸ்கின் குரலும் உருவமும் மாற்றியமைக்கப்பட்டவை என்பதும் பின்னர் தெரிய வந்தது.
முதலில் 250 டொலர் அனுப்பிய டெனிஸுக்கு, இரண்டு நாட்களில் 30 அமெரிக்க டொலர் லாபம் கிடைத்ததாகக் காட்டப்பட்டது.
இதனால் அது உண்மையான முதலீடு என நம்பிய அவர், மேலும் பணம் முதலீடு செய்தார். போலி ஆவணங்கள் மூலம், முதலீடு வளர்ந்து வருவதாக அவருக்கு காட்டப்பட்டது.
இதனால் நம்பிக்கை அதிகரித்த டெனிஸ், வீட்டின் மீது இரண்டாவது அடகு (Second Mortgage) எடுத்து, சுமார் 1.2 மில்லியன் டொலரை அனுப்பியுள்ளார். பின்னர், வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என கூறி மேலும் பணம் கேட்டனர். குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி, கிரெடிட் கார்டுகளையும் முழுமையாக பயன்படுத்திய அவர், இறுதியில் 1.7 மில்லியன் டொலரை முழுவதுமாக இழந்தார். “நீங்கள் உங்கள் வீட்டை விற்க வேண்டியிருக்கும்” என மோசடிக்காரர் கூறி தொலைபேசியை துண்டித்ததாகவும் அவர் கூறினார்.
“என்னிடம் இப்போது ஓய்வூதிய சேமிப்பு எதுவும் இல்லை; எல்லாமே போய்விட்டது,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதேபோல், பிரின்ஸ் எட்வர்ட் தீவின் சார்லட்டவுனைச் சேர்ந்த டொனால்ட் ஹான்ரஹன் என்பவரும், Dragon’s Den நிகழ்ச்சியால் ஆதரிக்கப்படுவது போல தோன்றிய ஒரு கிரிப்டோ விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்துள்ளார்.
சிறிய தொகையிலிருந்து தொடங்கிய அவர், பின்னர் தினமும் 10,000 டொலர் வரை செலுத்தி, மொத்தமாக 600,000 டொலர் இழந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கனடா பிரஜைகள் 1.2 பில்லியன் டொலருக்கும் அதிகமாக முதலீட்டு மோசடிகளில் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல சம்பவங்கள் AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது.