பிரேசிலில் இரு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்து ; 6 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) நகருக்கு மேலாக நடுவானில் இரண்டு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அவற்றில் பயணித்த 6 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தானது,நகரின் மேற்குப் புறநகர்ப் பகுதியான 'ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ்' (Recreio dos Bandeirantes) என்ற இடத்திற்கு மேலாக நேர்ந்துள்ளது.
இதேவேளை விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு வானூர்திகள், அங்கிருந்த மின்சார சிற்றூந்து விற்பனை நிலையம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் (Parking lot) வீழ்ந்து நொறுங்கியுள்ளன.

இதன் காரணமாக அங்கிருந்த சுமார் 20 மின்சார வாகனங்கள் (Electric Vehicles) தீப்பற்றி எரியத் தொடங்கியதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மின்சார வாகனங்களில் உள்ள லித்தியம்-அயன் (Lithium-ion) மின்கலங்கள் காரணமாக, ஏற்பட்ட தீயை அணைப்பதில் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிட்டதாக தீயணைப்புப் பிரிவின் ஊடகப்பேச்சாளர் பேபியோ கொன்ட்ரெய்ராஸ் (Fabio Contreiras) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த வகையான மின்கலங்கள் தீப்பற்றும்போது, அவை அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை வெளியிடுவதுடன், தீயின் வெப்பத்தையும் தீவிரத்தையும் அதிகரிக்கின்றன.
இவ்வாறான மின்சார வாகனம் ஒன்றில் ஏற்படும் தீயை அணைப்பதற்கு, ஒரு சாதாரண சிற்றூந்தில் ஏற்படும் தீயை அணைக்கத் தேவைப்படும் நீரை விட 3 முதல் 4 மடங்கு அதிக நீர் தேவைப்படுகிறது, என்றார்.
விபத்து நடந்த சுற்றுவட்டாரப் பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். வானூர்திகள் இந்த வாகன நிறுத்துமிடத்தில் விழாமல் குடியிருப்புப் பகுதியில் விழுந்திருந்தால், உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீப்பற்றி எரிந்த மின்சார வாகனங்களுக்கு இடையே விழுந்து நொறுங்கிய ஒரு வானூர்தியில் இருந்து 5 உடலங்களையும், அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் விழுந்த மற்றுமொரு வானூர்தியில் இருந்து அதன் விமானியின் உடலத்தையும் மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதேவேளை வானூர்திகளின் பாகங்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து பல நூறு மீற்றர் தூரத்திற்கு சிதறிப் போய்க் காணப்பட்டதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.