ஒட்டாவா ஆற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை பலி
ஒட்டாவா ஆற்றில் விழுந்து மீட்கப்பட்ட இரண்டு வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில், கிச்சி ஜிபி மிகான் பகுதிக்கு அருகே ஒரு குழந்தை காணாமல் போனதாகத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ஒட்டாவா மற்றும் காட்டினோவைச் சேர்ந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுமார் 40 நிமிட தேடுதலுக்குப் பிறகு, குழந்தை கரையொதுக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை, சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ட்ரோன்கள், விமானம் மற்றும் 4-க்கும் மேற்பட்ட படகுகள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஒட்டாவா காவல்துறையின் வான்வழி ஆதரவு பிரிவு (Air Support Unit) இறுதியில் குழந்தையைக் கண்டறிய உதவியது.
தேடுதல் பணி சீஃப் வில்லியம் கமாண்டா பாலத்திற்கு அருகே தொடங்கி ஆற்றின் திசையில் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கமான நடைமுறைப்படி, சிறு குழந்தையின் மரணம் என்பதால் ஒட்டாவா காவல்துறையின் கொலைப்பிரிவு மற்றும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவு இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து என்று தெரியவந்துள்ளது. தற்போது வரை இது ஒரு விபத்தாகவே கருதப்படுகிறது. குழந்தை ஆற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆற்றின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், நீரோட்டம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.