பிரித்தானியாவில் மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியீடு!
பிரித்தானியாவில் நீண்ட காலம் ராணியாக இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) கடந்த மாதம் 8-ம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாணயங்களை அதிகாரபபூர்வமாக தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனம் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை நேற்று வெளியிட்டது.
இதோடு மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 நாணயங்களும் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது.
மறைந்த அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாவும், அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.