உக்ரைனில் இத்தனை மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டார்களா? பகீர் கிளப்பும் தகவல்
ரஷ்ய படையெடுப்பால் குண்டுவீச்சுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சி இதுவரை 4 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இதுவென கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அகதிகள் முகமை குறித்த தகவலை தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் போலந்திற்கு சென்றுள்ளனர் எனவும், ஆனால் பலர் மற்ற நாடுகளுக்கு அல்லது உக்ரைனுக்கு திரும்பிச் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 6.5 மில்லியன் மக்கள் போர் நெருக்கடி காரணமாக வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 608,000 க்கும் அதிகமானோர் ருமேனியாவிற்கும், 387,000 க்கும் அதிகமானோர் மால்டோவாவிற்கும், சுமார் 364,000 பேர் ஹங்கேரிக்கும் போர் தொடங்கியதில் இருந்து தஞ்சமடைந்துள்ளனர்.
மொத்தமாக, உக்ரைனில் இருந்து 4 மில்லியன் மக்கள் பிப்ரவரி 24ம் திகதி போர் தொடங்கியதில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக ஐ.நா மன்றம் தெரிவித்துள்ளது.