அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனுக்கான பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடர்வது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) உடன் பேசியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடந்து 11 வது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றது.
நேற்றைய தினம் சில மணி நேரங்களுக்கு மீட்பு பணிகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்த நிலையில் மீண்டும் ரஷ்யா இன்று ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதை நேட்டோ ஏற்க மறுத்துவிட்டது. உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடுவார்கள் என வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
அவ்வப்போது பொதுவெளியில் டிஜிட்டல் திரையில் தோன்றி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடினார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,
அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அமெரிக்காவின் ஆயுத உதவி, அவரிடம் பாதுகாப்பு, உக்ரைனுக்கான நிதியுதவி, ரஷ்யாவுக்கு எதிராக தொடர் தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என பதிவிட்டுள்ளார்.
போர் தாக்குதல் தொடர்பாக ரஷியா - உக்ரைன் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.