ரஷ்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உக்ரைன் படையினர்!
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கின்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிரிமியா பாலத்தில் குண்டு வெடித்து ஒரு பக்கம் தகர்க்கப்பட்டுள்ளது.
அதனால் அந்தப் பாலத்தின் வழியே ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்ட ரஷ்யப் போர் டாங்கிகளின் அணியில் தீப்பற்றியுள்ளது. பாலத்துக்குச் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
பாலத்தின் வீதிப் பகுதியில் லொறி ஒன்று வெடித்துச் சிதறியதையும் அதன் அருகே செல்லும் ரயில் தடத்தில் டாங்கி ஒன்று தீப்பற்றி எரிவதையும் மொஸ்கோவில் ரஷ்யப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இன்று காலை நடந்த இந்த வெடிப்பை அடுத்துப் பாலத்தின் வழியான போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இருந்து கிறீமியாவுக்கு ரயில் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட இராணுவ வாகனங்களின் அணியிலேயே தீப் பற்றியுள்ளது.
அண்மையில் ரஷ்யா ஆக்கிரமித்து இணைந்த பிராந்தியஙகள் மீது உக்ரைன் படைகள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. சுமார் 2,500 சதுர கிலோ மீற்றர் இழந்த நிலத்தை மீளக் கைப்பற்றி விட்டோம் என்று அதிபர் ஷெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு போர் தீவிரமடைந்துள்ள பின்னணியிலேயே கிறீமியா பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. ரஷ்யப் படைகள் பின்வாங்கி வருவதால் புடின்(Putin) போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் மீது உள்நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மொஸ்கோ அணு ஆயுதத் தாக்குதல்களுக்காக நாட்டைத் தயார்ப்படுத்தி வருகின்றது என்று உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.