விஞ்ஞான உலகையே சிந்திக்க வைத்த மர்மம் ; கதிரியக்கத்தைத் தாண்டிய பூஞ்சை வாழ்வு
முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் இந்நாள் உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில்லில், அணு உலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிரியக்கத்தையும் மீறி, பூஞ்சை ஒன்று செழித்து வளரும் விடயம் அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
1986ஆம் ஆண்டு செர்னோபில்லில் அணு உலை ஒன்று வெடித்தது.
இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்து சுமார் 40 ஆண்டுகள் ஆகும் நிலையில், மனிதர்கள் அங்கு வாழவே முடியாது என ஆகிவிட்ட நிலையில், பூஞ்சை ஒன்று செழித்து வளர்வதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த க்ளாடோஸ்போரியம் பூஞ்சை கருப்பு நிறத்தில் உள்ளது. அதற்குக் காரணம், அந்த பூஞ்சையில் மெலானின் என்னும் ஒரு நிறமி உள்ளது. முக்கிய விடயம் என்னவென்றால், இந்த மெலானின் அந்த பூஞ்சைக்கு நிறத்தை மட்டும் கொடுக்காமல், அது அந்த பூஞ்சையைப் பாதுகாக்கவும் செய்வதாக சில அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.
அந்த மெலானின் என்னும் நிறமி, கதிரியக்கத்திலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்ய க்ளாடோஸ்போரியம் பூஞ்சைக்கு உதவுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
Photosynthesis என அழைக்கப்படும் ஒளிச்சேர்க்கையை ஒத்திருக்கும் இந்த செயல்முறையை, அறிவியலாளர்கள் Radiosynthesis, அதாவது, கதிரியக்கத்திலிருந்து உணவு தயாரிக்கும் செயல்முறை என அழைக்கிறார்கள்.
அணு உலை வெடித்ததால் தொடரும் கதிரியக்கத்தை நீக்க ஆய்வாளர்கள் போராடி வரும் நிலையில், இந்த க்ளாடோஸ்போரியம் பூஞ்சை கதிரியக்கத்தைத் தனது உணவுக்காகப் பயன்படுத்துவதாக நம்பப்படுவதால், ஒருவேளை அது இயற்கையாகவே கதிரியக்கத்தை நீக்கும் ஒரு அருமருந்தாக அமையுமோ என்றும் சில ஆய்வாளர்களால் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
எனினும் இதனை இன்னும் ஆய்வுகள் மூலம் முழுமையாக உறுதி செய்யவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.