மலையில் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 5 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்கா - கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கிரீச் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக CH-53E சூப்பர் ஸ்டாலியன் ஹெலிகாப்டரில் கடற்படையினர், மரைன் கார்ப்ஸ் விமான நிலைய மிராமருக்கு சென்றனர்.
இவ்வாறான நிலையில், ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை 9:08 மணியளவில் கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில் மலையில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடரில், மேஜர் ஜெனரல் மைக்கேல் ஜே. போர்க்சுல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஹெலிகாப்டர் பயிற்சியின்போது, 3டி மரைன் ஏர்கிராப்ட் விங் மற்றும் பறக்கும் புலிகள் பிரிவுகளைச் சேர்ந்த 5 சிறந்த கடற்படை வீரர்கள் உயிரிழந்ததை மிகவும் கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த சோகத்துடனும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த கடற்படையினரின் உடல்கள் மற்றும் உபகரணங்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.