இரண்டாவது கப்பலை அனுப்பி வடகொரியாவை சீண்டும் அமெரிக்கா!
வடகொரியாவின் ராணுவ அத்துமீறல்களை எதிர்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ள நிலையில் இரண்டாவது கப்பலை அனுப்பி வடகொரியாவை அமெரிக்கா சீண்டியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) எனும் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், தென் கொரிய துறைமுகத்தை வந்தடைந்தது.
அணுஆயுத போர் ஏற்பட்டால் பதிலடி
அதேவேளை 1980-களுக்குப் பிறகு தென்கொரியாவிற்கு வருகை தரும் ஒரு அமெரிக்க அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் இதுதான்.
வட கொரியாவுடன் அணுஆயுத போர் ஏற்பட்டால் பதிலடி கொடுக்க அமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் யுஎஸ்எஸ் கென்டுக்கியின் (USS Kentucky) வருகைக்குப் பிறகு கடந்த வாரம், 2 வெகுதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.
நேற்று முன் தினமும் மீண்டும் சில குரூஸ் ஏவுகணைகளை ஏவியது. இந்த நிலையில் இன்று இரண்டாவதாக யுஎஸ்எஸ் அனாபோலிஸ் (USS Annapolis) எனும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவை வந்தடைந்தது.
இந்நிலையில் "தென்கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூவில் உள்ள கடற்படை தளத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கிறது.
அறிவிக்கப்படாத சில செயல்பாடுகளுக்காக ராணுவ தளவாடங்கள் அதில் ஏற்றப்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கான கூட்டணியின் 70-வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில்,
யுஎஸ்எஸ் அனாபோலிஸின் வருகையுடன் ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்த இருநாட்டு கடற்படைகளும் திட்டமிட்டுள்ளன" என்று தென்கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
வெகுதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலான அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky), கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தென் கொரிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
யுஎஸ்எஸ் கென்டுக்கியை (USS Kentucky) போல் யுஎஸ்எஸ் அனாபோலிஸ் அணுஆயுதம் தாங்க கூடியதல்ல. எனினும் போரில் கடற்படை தாக்குதல் மற்றும் கப்பல் எதிர்ப்பிலும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பிலும் நிபுணத்துவம் பெற்றது.
மேலும் கடந்த செப்டம்பரில் கொரிய தீபகற்பத்தில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியிலும் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.