இலங்கைக்கு துவரம்பருப்பை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா
அமெரிக்க விவசாயத் திணைக்களமும் "சேவ் த சில்ரன்" (சிறுவர்களைப் பாதுகாப்போம்) அமைப்பும் கூட்டிணைந்து இலங்கையில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்களுக்குப் போஷாக்கான உணவை வழங்கும் நோக்கில் 320 மெட்ரிக் தொன் துவரம்பருப்பை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையானது 3000 மெட்ரிக் தொன் உணவை வழங்கும் செயற்திட்டத்தின் ஓரங்கமாக அமைந்திருப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நன்கொடையை இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.
இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சுகாதார அமைச்சு, தேசிய திட்டமிடல் திணைக்களம், ‘சேவ் த சில்ரன்’ (சிறுவர்களைப் பாதுகாப்போம்) அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.