கனடாவில் திருமண கொண்டாட்டத்தில் வாகனத்தை மோதவிட்ட நபரால் பரபரப்பு
மேற்கு வான்கூவரில் திருமண விருந்தின் இடையே வாகனம் புகுந்த விபத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பத்து பேர் காயங்களுடன் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 6.10 மணியளவில் கீத் சாலை பகுதியில் குறித்த விபத்து நடந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை 60 வயது கடந்த பெண்மணி ஒருவர் செலுத்தியதாகவே பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தை அடுத்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டவர்களில் குறித்த சாரதியும் ஒருவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கின் துவக்க கட்டத்தில் இருப்பதால், கைது நடவடிக்கை மற்றும் பிரிவுகள் தொடர்பில் தற்போது தகவல் ஏதும் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்காது என்றே பொலிசார் கூறியுள்ளனர்.
செல்வந்தர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதி அதுவென கூறப்படுகிறது. குறித்த சம்பவமானது திட்டமிடப்பட்டதா அல்லது விபத்தா என்பது தொடர்பில் குழப்பமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த இருவர் மற்றும் காயமடைந்த 10 பேர்கள் தொடர்பில் முழுமையான தகவல் ஏதும் இதுவரை பொலிஸ் தரப்பால் வெளியிடப்படவில்லை.
மேலும், இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.