பிரான்ஸில் பொது மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!
பிரான்ஸில் எரிசக்தி விலை உயர்வடைந்துள்ள நிலையில், EDF நிறுவனத்தினர் போன்று நடித்து, மக்களின் வங்கித் தகவலை திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, 25 LED மின்குமிழிகள் ஒரு யூரோவிற்கு பெறலாம் என்ற மோசடியான மின்னஞ்சல் இணையத்தில் பரவி வருகிறது என்பதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மின்னஞசலில் “நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல், ஐரோப்பாவில் ஹெலோஜன் (halogen) மின்குமிழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மின்குமிழிகள் மிகவும் அதிக ஆற்றல் பயன்பாட்டிற்கு காரணமாகியுள்ளது.
2022 இன் ஐரோப்பிய ஆணையை பின்பற்றும் ஒரு மாற்றம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்குமிழிகளை உடனடியாக மாற்றுவதற்காக தாங்கள் ஒரு யூரோவுக்கு 25 LED மின்குமிழிகள் வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் வீட்டிற்கு நேரடியாக வந்து அந்த மின்குமிழிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்வதற்காக வங்கி விபரங்களை மக்கள் கட்டாயம் உள்ளடக்க வேண்டும் என அந்த மின்னஞ்சலின் விசேட பதிவாக பதிவிடப்பட்டுள்ளது.
இது திட்டமிட்டு மோசடி கும்பலினால் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கை என்பதனால் இந்த மின்னஞ்சல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், இந்த மோசடி மின்னஞ்சலை பொது மக்கள் பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி விபரங்களை வழங்கும்மாறு EDF நிறுவனம் பொது மக்களுக்கு மின்னஞ்சலை அனுப்பாதென்பதனால் இவ்வாறான மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடியில் யாராவது சிக்கியிருந்தால் முறைப்பாடு செய்ய இணையத்தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மோசடியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.