கனடாவில் 400 கிலோ தங்கம் திருடப்பட்ட விவகாரம்: பதில் கிடைக்காத கேள்விகள்
கனடா விமான நிலையமொன்றிலிருந்து 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் சிலவற்றிற்கு இன்னமும் பதில் கிடைத்தபாடில்லை.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது.
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிசாருக்கு 9 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், விமான நிறுவன ஊழியர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மூன்று பேர் தலைமறைவாகிவிட்டார்கள்.
திருடப்பட்ட, 400 கிலோ எடையுள்ள அந்த 6,600 தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர்கள். பிரச்சினை என்னவென்றால், திருடப்பட்ட அந்த தங்கத்தில் செய்யப்பட்ட, 89,000 டொலர்கள் மதிப்புடைய ஆறு வளையல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள தங்கம் போன இடம் தெரியவில்லை. 6,600 தங்கக் கட்டிகளை விற்பது எளிதல்ல என்பதால், அந்த தங்கக் கட்டிகள் உருக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடமிருந்து சுமார் 65 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், விலையுயர்ந்த அந்த துப்பாக்கிகள், தங்கம் விற்ற பணத்தில் வாங்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். விசாரணை தொடர்கிறது.