யாருக்கு வாக்களிக்க வேண்டும்: அமெரிக்க மக்களுக்கு எலான் மஸ்க் வெளிப்படை
அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் சூட்டைக் கிளப்பியிருக்கும் நிலையில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என எலான் மஸ்க் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கு கடும் விமர்சனமும், பாசாங்குத்தனம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்ற கிண்டலும் எழுந்துள்ளது. முன்னெடுக்கப்படும் இடைக்கால தேர்தல் முடிவில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் யார் அமர்வது என்பதை முடிவு செய்யப்படும்.
இதனால் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சிக்காக பிரச்சாரம் செய்து வரும் முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில்,
ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜனாதிபதி பைடன் ஆகியோர் ஒரே பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். இடைக்கால தேர்தல் ஆனது ஜோ பைடனின் இரண்டாண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையிலேயே எலான் மஸ்க் தமது அழுத்தமான அரசியல் பார்வையை தனது டுவிட்டர் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது இந்த முறை மக்கள் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே நாம் ஜனநாயகக் கட்சி உறுப்பினரை ஜனாதிபதியாக தெரிவு செய்துவிட்டோம் எனவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் தாம் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக தமது டுவிட்டர் நிறுவனம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என கூறி வந்த எலான் மஸ்க், பொதுமக்கள் நமிபிக்கையை பெற்ற பின்னர் தனது அரசில் சார்பு முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் என விமர்சிக்கப்படுகிறது.