விமான நிலைய Escalator இல் சிக்கிகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் Escalator இல் பெண் ஒருவர் சிக்கி கொண்டதால் காலை இழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
57 வயதான தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், போர்டிங் செய்ய நகரும் படிக்கட்டில் (Escalator)சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவருடைய கால்கள் நகரும் படிக்கட்டுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது.
காலை அகற்றிய மருத்துவர்கள்
இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவரை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். எனினும் துரதிஷ்ட விதமாக அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முழங்கால் வரை அவருடைய கால்களை அகற்றும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த பெண்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பேங்காக் நகரில் இருந்து நக்ஹோன் சி தம்மரெட் என்ற இடத்திற்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்துவிட்டாலும், அவருக்கு மேற்கொண்டு தொற்று ஏற்படாமல் அவரை மருத்துவர்கள் கவனித்து வருவதாக அந்த பெண்மணியின் மகன் உருக்கமாக கூறியுள்ளார்.
அதேசமயம் தாய்லாந்து நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்கும் அரசுக்கு சொந்தமான ஏர்போர்ட்ஸ் ஆஃப் தாய்லாந்து (ஏஓடி) சார்பாக பேசிய அந்த விமான நிலைய இயக்குனர் கரந்த், அந்த பெண்ணின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அவர்களே ஏற்பார்கள் என்றும், அந்த பெண்ணுக்கு வேண்டிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.