உலக அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை!
கடந்த சில வாரங்களாக பல நாடுகளில் பரவி கொண்டிருக்கும் குரங்கு அம்மை காற்றின் மூலமாக பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்றும் உலக சுகாதார மையம் (World Health Organization) தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) கூறுகையில்,
குரங்கு அம்மை நோய் பரவல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருந்தாலும், அது தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இதுவரை குரங்கு அம்மை பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.