கனடாவில் இளையோர் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு
கனடாவில் இளையோர் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 18 வயதிற்குக் குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிபர அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய அளவில் கொலைவிகிதம் சிறியளவில் குறைந்திருந்தாலும், இச்சூழல் எதிர்பாராத மாற்றமாக கருதப்படுகிறது.

கொலை குற்றம்
2023 இல் 65 இளையோர் கொலை குற்றத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 2024 இல் இந்த எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இளைஞர்களின் கொலை குற்றச்சாட்டு ஒரு இலட்சம் இளையோருக்கு 0.94 என்ற அளவை எட்டியுள்ளது.
மேலும், பல இளைஞர்கள் இணைந்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; இதில் 5 கொலைகள் மூன்று பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
2024 இல் கனடா முழுவதும் 788 கொலைகள் பதிவாகியுள்ளன என்பதுடன் இது 2023 ஐ விட 8 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மொத்த கொலைவிகிதம் 4% குறைந்து, ஒரு இலட்சம் மக்களுக்கு 1.91 என வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், இவ்விகிதத்திற்குள் சில சமூகங்கள் தொடர்ந்து மிகுந்த ஆபத்தில் உள்ளன.
கனடாவின் மக்கட்தொகையில் 5% மட்டுமே உள்ள பூர்வீக மக்கள், 2024 இல் கொல்லப்பட்டவர்களில் 30% ஆக பதிவாகியுள்ளனர்.