வசந்த கரன்னாகொடவின் புத்தகத்தை பிரித்தானியாவில் விற்பனையிலிருந்து நீக்கிய Amazon
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட எழுதிய புத்தகத்தை பிரித்தானியாவில் விற்பனையிலிருந்து நீக்குவதற்கு Amazon நடவடிக்கை எடுத்துள்ளது.
'The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism' என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், வசந்த கரன்னாகொடவின் சுயசரிதையாகும்.
ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்களையும் விற்பனை செய்யும் இலத்திரனியல் சந்தையான அமேசோனின் பிரித்தானியா கிளைக்கு, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் விடுக்கப்பட்டகோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடைச் சட்டங்களை மீறும் என்று இந்த திட்டம் குறித்த நிறுவனத்திற்குத் தெரிவித்திருந்தது.
பிரித்தானிய அரசாங்கத்தினால் தடைகளுக்கு உட்பட்ட ஒருவருக்கு காப்புரிமைஉள்ளிட்ட வளங்களை வழங்குவது ஒரு குற்றவியல் குற்றமாகும் என்பதுடன் மேலும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த கோரிக்கைக்கு Amazon இன் பிரித்தானிய கிளை எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கூறுகிறது.
கடந்த மார்ச் 24 ஆம் திகதி அன்று பிரித்தானிய அரசாங்கத்தால் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பலர்மீது தடைகள் விதிக்கப்பட்டதன் பின்னணியில் தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடையில் நாட்டின் உள்நாட்டுப் போரின் போது கடற்படைத் தளபதியாக பணியாற்றியபோது, நீதிக்குப் புறம்பான கொலைகள் உட்பட மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் கூறி, வசந்த கரன்னாகொடவுக்கும் மேலும் நால்வருக்கும் தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.