கனடாவில் மசாஜ் நிபுணரான ராஜா ராமசாமியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மேன்லாண்ட் பகுதியில் பணியாற்றிய மசாஜ் நிபுணர் ஒருவர், ஒரு பெண்ணின் அனுமதியின்றி அநாகரீகமாக தொட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பாலியல் ரீதியான துன்புறுத்தலாகவும் தொழிலை மோசமாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டள்ளது.
ராஜா ராமசாமி என்ற அந்த நிபுணர் மீது 2023 அக்டோபரில் இதே குற்றச்சாட்டில் பாலியல் தாக்குதல் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு, ஒழுங்காற்று குழுவிற்கு கட்டாயமானதும் இறுதியுமான ஆதாரமாக கருதப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், மசாஜ் சிகிச்சை நிலையத்தில் ராமசாமியின் மாணவியாக இருந்ததாகவும், பல ஆண்டுகள் கழித்து முகநூல் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 2021 ஏப்ரலில் ராமசாமி அந்த பெண்ணின் குடியிருப்பிற்கு சென்று மசாஜ் அளித்தபோது, எதிர்பாராத விதமாக பெண்ணை தகாத முறையில் தீண்டியதாக நீதிமன்றம் கண்டறிந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
ராமசாமி குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தாலும், அவரது வாக்குமூலம் “முரண்பாடுகளுடன் இருந்தது” மற்றும் சில பகுதிகள் “நியாயமானதாக இல்லை” என்று நீதிபதி குறிப்பிட்டார்.
மறுபுறம், பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய சாட்சியம் “நிலைத்ததும் நம்பகமானதும்” என மதிப்பிடப்பட்டதால், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
2025 நவம்பரில் ஒழுங்காற்று விசாரணை நடைபெறுவதற்கு முன்பே ராமசாமி தனது பணியாற்றும் உரிமத்தை ஒப்படைத்திருந்தார்.
அவர் விசாரணைக்கு நேரில் வரவோ, சட்ட பிரதிநிதியை ஏற்படுத்திக்கொள்ளவோ இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது நடத்தை பாலியல் தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அவருக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள் குறித்து ஒழுங்காற்று குழு கருத்துகளைப் பெற்று வருகிறது.
இறுதி தீர்ப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.