பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக ட்ரம்ப் மீது ICC நீதிபதிகள் நடவடிக்கை
தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்றும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அச்சுறுத்தி பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த கிம்பர்லி ப்ரோஸ்ட், உகாண்டாவைச் சேர்ந்த சொலோமி பலுங்கி போஸ்ஸா மற்றும் பெனின் நாட்டைச் சேர்ந்த ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலாபினி-கான்சோ ஆகிய நீதிபதிகளே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததற்கும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் புரிந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அனுமதி வழங்கியதற்கும் பழிவாங்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு பொருளாதாரத் தடைகளை விதித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தடைகள் காரணமாக தங்களின் கிரெடிட் கார்டுகள், வங்கிச் சேவைகள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற இணையச் சேவைகளின் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளைப் பெறுவதிலும் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக 66 பக்க மனுவில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.