16 மணி நேரம் பணயக்கைதி ; உயிர் தப்பிய சிறுமியின் வாழ்க்கைப் போராட்டம் 40 ஆண்டுகளுக்குப் பின் வைரல்
1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வானூர்தி கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடத்தலுக்குப் பின்னர் பயணிகள் சுமார் 16 மணி நேரம் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் வானூர்தியின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த கொடூரமான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானூர்தி கடத்தப்பட்டிருந்த நிலையில், அவசரகால வெளியேறும் கதவு வழியாக தாம் தப்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
வானூர்தியின் இறக்கையில் நின்றிருந்த தமக்கு பணிப்பெண் ஒருவர் உதவி செய்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தப் பயங்கரமான அனுபவம் தனது வாழ்க்கையை முடக்குவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆழ்கடல் நீச்சல், சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தனது Instagram பக்கத்தில் காணொளி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.
“குணமடைதல் என்பது நடந்ததை மறந்துவிடுவது அல்ல. நாம் வாழத் தொடங்குவதற்கு முன்பே குணமடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை; நாம் வாழ்வதன் மூலமே குணமடைதல் இடம்பெறுகிறது” என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவரது இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடுமையான அனுபவத்தை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையை தைரியத்துடனும் மனவலிமையுடனும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அவரது முயற்சிக்கு சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.