அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் ; 2 வீரர்கள் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான தாக்குதல் வகை அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன், வயல்வெளியில் இருந்த புற்களிலும் தீ பரவியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.