அமெரிக்கா - ஈரான் பதற்றத்தில் புதிய திருப்பம்
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய வரைவுத் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி, பாகிஸ்தான் மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக இந்தப் பதில் இன்று அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

"முன்மொழியப்பட்டுள்ள கட்டமைப்பின் அடிப்படையில், இந்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஈரானின் பதிலில் உள்ள விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் சிரேஷ்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த சில நாட்களில் உச்ச தலைவர் நடத்திய இரண்டாவது நேரடிச் சந்திப்பு இதுவாகும். இந்தச் சந்திப்பின் போது ஈரானிய ஆயுதப் படைகளின் தயார் நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த ஜெனரல் அப்துல்லாஹி, "எந்தவொரு எதிரி நடவடிக்கையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஈரான் இராணுவம் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
எதிரிகள் ஏதேனும் மூலோபாயத் தாக்குதலை நடத்தினால், அதற்கு மிகக் கடுமையான மற்றும் பலமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனது தந்தையான அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு மொஜ்தாபா கமேனி பதவிக்கு வந்தபோதிலும், அவரது புகைப்படம் அல்லது வீடியோ எதுவும் இதுவரை அரச ஊடகங்களால் வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக அவரது உடல்நிலை மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து சர்வதேச ரீதியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்ச தலைவருடன் இரண்டரை மணித்தியாலங்கள் கலந்துரையாடியதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் நிர்வாகத்திற்குள் சில உள்முரண்பாடுகள் நிலவிய போதிலும், போர் உத்திகளை வகுப்பதிலும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்துவதிலும் மொஜ்தாபா கமேனி தீர்க்கமான பங்கினை வகிப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.