ஹோர்முஸ் நீரிணை பதற்றம் ; அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அங்கீகரிக்காத கடல் வழித்தடத்தில் வணிகக் கப்பல்கள் பயணித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் நிலவிய இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஈரானின் சிஸ்தான்–பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள 388ஆவது தரைப்படைப் பிரிவின் இராணுவ முகாம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஏழு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கிரேட்டர் துன்ப் தீவில் அமைந்திருந்த பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களும் அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 72 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட கடல்வழி முற்றுகைக்குப் பின்னர், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி பயணிக்க முயன்ற இரண்டு வணிகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல்சார் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அந்நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடருமானால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், அடுத்த கட்டமாக முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.