குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்க வாய்ப்பில்லை!
இந்தியாவில் இடம்பெறும், குவாட் தலைவர்கள் பங்குகொள்ளும் இந்தோ பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கு கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகளைப் பேணும் வகையில், இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அமைப்பு பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பினை வழங்குகிறது.
எனினும், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குவாட் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, சீனா இந்த அமைப்பை எதிர்த்து வருகின்றது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் டெலாவரில் நடந்த 4ஆம் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அந்த உச்சி மாநாட்டின் போது இந்த வருடத்திற்கான மாநாட்டை இந்தியா நடத்த வேண்டும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய, 2025 குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்தியாவுக்கு எதிராக அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.