டிரம்பின் புதிய எச்சரிக்கை உலக அரசியலில் பரபரப்பு ; ஈரானுக்கு கடும் மிரட்டல்
ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், “Project Freedom” திட்டத்தை மேலும் அதிரடியாக மீண்டும் செயல்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையால், சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் பல அந்தப் பகுதியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலைமையைத் தொடர்ந்து, வெளிநாட்டு கப்பல்களை பாதுகாப்பாக மீட்கும் நோக்கில் “Project Freedom” என்ற திட்டத்தை அமெரிக்கா அறிவித்திருந்தது.
எனினும், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் விடுத்த அமைதி பேச்சுவார்த்தை கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக டிரம்ப் பின்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், “ஈரானுடன் நல்ல உடன்பாடு எட்டப்படாவிட்டால், மீண்டும் கடுமையான நடவடிக்கைகளுக்கு திரும்புவோம்” என தெரிவித்துள்ளார். மேலும், “Project Freedom நல்ல திட்டம்தான்.
ஆனால் அதைவிட வலுவான வழிமுறைகளும் எங்களிடம் உள்ளன. மீண்டும் அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அது ‘Project Freedom Plus’ ஆக இருக்கும். அதில் கூடுதல் அதிரடி நடவடிக்கைகள் இடம்பெறும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்து மேற்காசிய அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.