ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி ; 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் 40 நாட்களாக நீடித்த நிலையில், கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் பிராந்தியத்தில் நிலவிய பதற்றம் ஓரளவு தணிந்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெற்றன.
சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என அமெரிக்கா பின்னர் அறிவித்தது.

இதையடுத்து, ஈரானின் துறைமுகங்களைச் சூழ அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஈரானுக்குள் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா–ஈரான் மோதலுக்கு முன்பு வரை, ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு சராசரியாக 130-க்கும் அதிகமான கப்பல்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், கடந்த 24 மணிநேரத்தில் எந்தக் கப்பலும் அந்த வழித்தடத்தை பயன்படுத்தவில்லை என கடல்சார் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஹார்மூஸ் ஜலசந்தி வழித்தடத்தில் வழக்கமான கடல்சார் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு படை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இன்று மட்டும் 61 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக 4 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.