ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ; டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மூன்று அமெரிக்க போர்க்கப்பல்கள் எந்த சேதமும் இன்றி ஹார்முஸ் நீரிணை வழியாக வெற்றிகரமாக பயணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது எதிரிகள் தாக்குதல் நடத்திய போதிலும், அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஈரானின் கடற்படை நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட சிறிய படகுகள் அமெரிக்காவின் பதிலடி தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும், அவை கடலில் மூழ்கியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தாக்குதலுக்கு வந்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வானிலேயே தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அவை கடலில் விழுந்த காட்சி கவர்ச்சிகரமாக இருந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.
ஈரான் ஒரு சாதாரண நாடாக இல்லை என்றும், அங்கு ஆபத்தான தலைமை இருப்பதாகவும் விமர்சித்த டிரம்ப், அணு ஆயுதம் கிடைத்தால் அந்த நாடு அதை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, அணு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஒப்பந்தத்தில் முடிவடையாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை “இரும்பு சுவர்” போன்ற பாதுகாப்பு அமைப்புடன் செயல்படுவதாகவும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.